இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் சந்தித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் ரணில் மேற்கொண்ட முதல் சந்திப்பு இதுவாகும்
ரணில், நேற்று பதவியேற்ற பின்னர் இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பொன்றை ரணில் இன்று மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளது.
இலங்கையின் அனைத்து மக்களினதும் நல்வாழ்வை நோக்கிய ஜனநாயக செயல்முறைகள் மூலம் இலங்கையில் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இந்தியா மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் குறித்து கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மே மாத இறுதியில் புதுடில்லி செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்ற ரணில், இந்தியாவுடனான அரசியல் பொருாளதார உறவு மேம்படுத்தப்படும் என்றும், இந்தியாவிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரணிலின் ராஜதந்திர காய் நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.