இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் சோதனை உறுதி செய்யப்பட்ட 55 வயதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். இதன் மூலம் தமிழகத்தில், கொரோனா தொற்று வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர,நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 105 பெயர் பட்டியலில், ஆறு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், ஒரு காவலாளி, இரண்டு பத்திரிகையாளர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டவர்களும் அடங்குவர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவ வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில்,”வெண்டிலேட்டர் உதவியில் இருந்த இவருக்கு, நேற்று மதியம் வரை இதய துடிப்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை. 6 மணியளவில் இதயம் திடீரென முடங்கியது,”என்று தெரிவிக்கின்றனர்.
மறைந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்கு கொரோனா வைரஸ் தொற்று எப்படி வந்தது? என்பது குறித்த முழுமையான தகவல் இன்னும் தெரியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிகின்றனர்.
தமிழகத்தில், நேற்று வரை கொரோனா தொற்று பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,477- ஆக உயர்ந்துள்ளது. 2,411 மாதிரிகளின் சோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது .