உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்? உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றியும் குறிப்பிடுங்கள்?
எனது தந்தை கந்தையா. தாயார் நாகம்மா. அவர்களின் ஏக புத்திரியாக 1979.04.24 இல் பிறந்தேன். மகிழ்ச்சியான விவசாயக் குடும்பம் என்னுடையது. எனது ஆரம்பக் கல்வி கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியில் ஆரம்பமானது. இயற்கையின் வசந்தங்களும் வாய்க்கால் வரப்புகளையும் கொண்ட கரடிப்போக்கு எனது சொந்த ஊர். எங்கள் மகிழ்ச்சி, இலங்கையில் பிறந்த காரணத்தால் எனக்கு நீடித்துக் கிடைக்கவில்லை. இனப்போர் எனது பெற்றோர்களை 1986 இல் காவு கொண்டது. உற்றார் உறவினரற்று நான் அநாதை விடுதியில் வளர்ந்தேன்.
உயர் கல்வியை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கற்றேன். சட்டமும் பயின்றேன். கலைமானி பட்டமும் பெற்றேன். வாழ்க்கைத் துணையும் நன்றாக அமைந்தது. மூன்று பிள்ளைகளுக்கு தாயானேன். இறுதி 2009 யுத்தத்தில் எனது இரண்டரை வயது மகனையும் இழந்தேன். கடைசியில் கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இரண்டு பிள்ளைகளோடும் பெருந்துயரை மறைத்து வாழக் கற்றுக்கொண்டேன். அதுபோலவே வாழ்கின்றேன்.
உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?
ஆசிரியராக நான் வளர்ந்த அநாதை விடுதியிலேயே பணியாற்றினேன். ஊடகத்திலும் எழுத்துத் துறையிலும் கால் பதித்தேன். ''விடுதலைக் கனல்'', என்ற கவிதை நூலை 15 வது வயதிலும் ''சுவாசம் மட்டுமே சுடுகலனாய்...'' என்ற கவிதை நூலை போர் முடிந்த பின்பு 2018 இலும் வெளியிட்டேன். பத்திரிகைகளுக்கு எழுதிய சிறுகதைகள், போர் அனுபவங்கள், குறுநாவல், கவிதைகள் நூலுருப்பெறக் காத்திருக்கின்றன. பெண் தலைமைக் குடும்ப பெண்ணான நான் பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்த்து நூல்களையும் வெளியிடுவதானது சாதாரணமான விடயமல்ல என்பதை தாங்களும் உணர முடியும் என நினைக்கிறேன்.