புதுவை: தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை நியமித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா ஆளுநரான சதாசிவம் பதவி காலம் முடிவடைவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப்கான் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. தமிழிசைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே... வானதி சீனிவாசனுக்கு இப்பவே குவியும் வாழ்த்துகள்!
அதேநேரத்தில் பாஜகவினரை மட்டுமே ஆளுநர்களாக நியமிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தமிழிசையின் நியமனமும் அரசியல் சாசனத்துக்கு எதிரான தவறான முன்னுதாரணம்.
ஏற்கனவே சர்க்காரியா ஆணையப் பரிந்துரைகளில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.