Wednesday, May 18, 2022, 06:50:42

நம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா?

நிருபரின் பெயர் : Yarlsri news
  • புதுப்பிப்பு நேரம் : Apr 26, 2020 Sunday
  • 359 views

தெளிவு பெறு ஓம்நமக்குப் பசிக்கிறது என்றால் நாம் உணவருந்த வேண்டுமா அல்லது மற்றவர்கள் உணவு அருந்தினால் நமது பசி நீங்கிவிடுமா? நம்முடைய வேண்டுதலுக்கு நாம்தான் பரிகாரம் செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் செய்வதால் நமது வேண்டுதல் நிறைவேறிவிடாது.திருப்பதி உண்டியலில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருக்கிறேன், எனது வேண்டுதல் நிறைவேறிவிட்டது, அதனால் நீங்கள் செல்லும்போது இந்த நூறு ரூபாயை உண்டியலில் போட்டுவிடுங்கள் என்று மற்றவர்களிடம் கொடுத்த அனுப்புவது கூடாது. அவ்வாறு கொடுத்தனுப்பினால் வேண்டிக் கொண்டவர்கள் அந்த வேண்டுதலை நிறைவேற்றிவிட்டதாகக் கருத முடியாது. நாம் அனுப்பும் நூறு ரூபாயை இறைவன் எதிர்பார்ப்பதில்லை.நம்முடைய சிரத்தையையும், உண்மையான பக்தியையும்தான் எதிர்பார்க்கிறார். நாம் நேரில் சென்று இறைவனை தரிசித்து அவனது அருட்கொடைக்கு நன்றி கூறி அதன் பின்பு அந்த உண்டியலில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்துவதால் மட்டுமே நம்முடைய வேண்டுதல் என்பது முழுமையாக நிறைவேறும். ஆக, நம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்வது என்பது கூடாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.?மனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா? இதில் ஆன்மிகம் சொல்லும் உண்மை என்ன?

 - அயன்புரம் த. சத்தியநாராயணன்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு. ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் இந்த தலையெழுத்து என்பதை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்ன பாவகம் என்பது நிர்ணயம் செய்யும். லக்னம் என்று அழைக்கப்படும் முதல் பாவகமே ஒரு மனிதனின் விதியை நிர்ணயம் செய்கிறது. மனித உடற்கூறு இயலில் தலை என்பதைக் குறிப்பதும் இந்த லக்னம் ஆகிய ஒன்றாம் பாவகமே ஆகும். அதனை ‘ல’ என்ற எழுத்தினால் குறித்திருப்பார்கள். ‘ல’ என்ற எழுத்தானது சுழித்து எழுதப்படுவதால் இதனையே சுழி என்றும் குறிப்பிடுவார்கள்.பேச்சுவாக்கில் அவன் சுழி சரியில்லை என்று சொல்வார்களே, அந்தச் சுழி என்பதும் இந்த லக்னத்தையே குறிக்கும். சுழி சரியில்லை என்றால் அவனது தலையெழுத்து சரியில்லை என்பதே பொருள். ஒரு மனிதனின் ஜாதகத்தைக்கொண்டு அவனது தலையெழுத்தைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். ஜாதகம் அமைவது என்பது அவரவர் பூர்வ ஜென்ம வினையே ஆகும். பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்று ஜாதகம் எழுதுவதற்கு முன்னால் ஒரு ஸ்லோகத்தை எழுதியிருப்பார்கள். அதன் பொருளும் இதுவே. ஆக ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு என்பதே ஆன்மிக அறிவியல் ஆன ஜோதிடம் சொல்லும் உண்மை.?பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்?

- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.
தடைகள் அத்தனையும் தூள் தூளாகிவிட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். சிறு திருத்தம். பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பதாக நீங்கள் எண்ணுவது தவறு. பல பகுதிகளில் முருகனுக்கும், மாரியம்மனுக்கும் கூட சிதறு தேங்காய் உடைப்பார்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒரு தேங்காய், பயணத்தைத் துவக்கும்போது ஒரு தேங்காய், எரிமேலி சாஸ்தா ஆலயத்தில் ஒரு தேங்காய், கன்னி மூலை கணபதி சந்நதியில் ஒரு தேங்காய், பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு முன்னால் ஒரு தேங்காய், பயணம் முடித்து திரும்பவும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ஒரு தேங்காய் என்று சிதறு தேங்காய் உடைப்பதை வழக்கத்தில் கொண்டிருப்பார்கள்.கருப்பண்ண சுவாமிக்கும் சிதறு தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். திருஷ்டி சுற்றி போடும்போதும் சிதறு தேங்காய் உடைப்பார்கள். மொத்தத்தில் கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் தோஷம் பீடித்திருந்தாலும் சரி, காரியத்தடை ஆக இருந்தாலும் சரி, எல்லாவிதமான இடையூறுகளும் தகர்ந்து எளிதில் வெற்றி கிட்ட வேண்டும் என்பதே சிதறு தேங்காய் உடைப்பதன் நோக்கம். விக்னம் எனும் தடையை நீக்குபவன் விக்னேஸ்வரன் என்பதால் பெரும்பான்மையாக பிள்ளையார் கோயிலில் சிதறு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாகி இருக்கிறது.?குடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகுமா?

- அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை.
நிச்சயமாக இல்லை. வெள்ளை நிற ஆடை என்பது தூய்மையின் அடையாளம். வெண்ணிற ஆடை என்பது விதவைப் பெண்களுக்கு உரியது, இதனை சுமங்கலிப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து. பொதுவாக சுமங்கலிப் பெண்கள் எந்த நிறமாக இருந்தாலும் அதில் அலங்காரம் ஏதுமின்றி ஒரே வண்ணத்தில் அணிவதை விட பல நிறங்கள் கலந்தும், அலங்கார வேலைப்பாடுகளுடனும் கூடிய ஆடைகளை அணிவது என்பது நல்லது என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.அதாவது பார்ப்பதற்கு பளபளவென்று இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அலங்காரத்துடன் பெண்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் மகாலக்ஷ்மியின் அருள் அந்த குடும்பத்திற்கு என்றென்றும் நீடித்திருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே நேரத்தில் அந்த அலங்காரம் ஆனது சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.நெற்றியில் திலகம், கண்களில் மை, தலைவாரி பூச்சூடுதல், கை நிறைய வளையல்கள், கால்களில் தண்டை அல்லது கொலுசு, பலவண்ணங்களுடன் கூடிய புடவை, கழுத்தினில் ஆபரணம், பொன் நகையைவிட உயர்ந்த நகையான புன்னகை என்று எப்பொழுதும் கலகலவென்று பெண்கள் இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது. வெண்ணிற ஆடை என்பது அமங்கலமான விஷயம் என்று சாஸ்திரம் எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லை. வெண்ணிற பட்டுப்புடவை அலங்கார ஜரிகையுடன் இருப்பது இன்னமும் சிறப்பான ஒன்று.?ஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது?

 - விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.
குழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும். இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது. அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு பலன்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆக ஜனன காலத்திலிருந்தே அந்தக் குழந்தைக்கான பலன்களை ஜாதகம் கணித்து தெரிந்துகொள்ள முடியும்.ஆனால், ஒரு வயது வரை அந்தக் குழந்தை இறைவனின் குழந்தை என்றும், ஒரு வயது முடிந்ததும் குலதெய்வத்தின் கோயிலில் சிகை நீக்கி காதணி விழா நடத்தி அதனை இறைவனிடமிருந்து நமது குழந்தையாக ஸ்வீகரித்துக் கொள்கிறோம் என்றும் சம்பிரதாயம் இருப்பதால் அது வரை பொதுவாக குழந்தைக்கு ஜாதகம் எழுதி வைப்பதில்லை.ஒரு வயது முடிந்த பின்னர் ஜாதகம் எழுதி பலன்களைத் தெரிந்துகொண்டால் போதுமானது என்று பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்வதன் காரணமும் இதுவே. கிரஹங்களின் தாக்கம் என்பது குழந்தை ஒரு தாயின் வயற்றில் உருவாகும்போதே துவங்கிவிடுகிறது என்பதும், ஜாதகத்தை கணித்து பலன்களைத் தெரிந்துகொள்வது என்பது அந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே என்பதும் உங்கள் வினாவிற்கு உரிய தெளிவான விடை ஆகும்.?திருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் செல்லலாமா, கூடாதா?

 - கே. விஸ்வநாத், பெங்களூரு.
சென்றால் என்ன? திருநள்ளாறு என்றவுடனே சனீஸ்வரன் நினைவிற்கு வருகிறார். சனி என்றவுடன் ஏதோ தோஷம் போல ஒரு விதமான பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. திருநள்ளாறு ஸ்தலத்தில் சனீஸ்வரன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயத்தில் மூலவர் அருட்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆவார். அதுவும் ஒரு சிவாலயமே. அது சனீஸ்வரனின் தனிப்பட்ட ஆலயம் அல்ல. அங்கிருக்கும் சிவாலயத்தில் சனீஸ்வரனும் ஒரு பரிவார மூர்த்தி, அவ்வளவுதான். அங்கு சென்று சனீஸ்வரனை வணங்கிய பிறகு வேறு கோவில்களுக்குச் செல்லக்கூடாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. சனீஸ்வரனை தரிசித்த பிறகு தாராளமாக மற்ற ஆலயங்களுக்கும் செல்லலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2022 Yarlsri India news
Website by Yarlsri news