Wednesday, May 18, 2022, 06:49:49

தாராள பிரபு திரைப்படத்தின் விமர்சனம்

நிருபரின் பெயர் : Yarlsri news
  • புதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday
  • 363 views

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தாராளப் பிரபு . 2012ல் வெளியான விக்கி டோனர் என்னும் பிளாக்பஸ்டர் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக். செயற்கை கருத்தரிப்பு மையம் வைத்து நடத்தும் மருத்துவர் கண்ணதாசன்(விவேக்). தனது மருத்துவமனைக்கு ஆரோக்கியமான ஒரு உயிரணு டோனரை தேடிக்கொண்டிருக்கிறார். இவர் கண்களில் சிக்குகிறார் பிரபு கோவிந்த்(ஹரிஷ் கல்யாண்). விளையாட்டு கோட்டாவில் எப்படியேனும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இருக்கும் கால்பந்து விளையாட்டு வீரர். பிரபு கோவிந்தை ஒருவழியாக சமாளித்து தனது மருத்துவமனையில் டோனர் ஆகவும் மாற்றிவிடுகிறார் கண்ணதாசன்.இதற்கிடையில் பிரபு கோவிந்த் நிதி மந்தனா(தான்யா ஹோப்) மீது காதல் கொள்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பதை தெரிந்து கொள்கிறார் நிதி. பலரின் குழந்தை பிரச்சினையை தீர்த்து வைத்த தன் வாழ்வில் இப்படி ஒரு பிரச்சனையா என்ன ஒரு பக்கம் பிரபு கோவிந்த் வேதனையுடன் கண்ணதாசனிடம் ஆலோசனை கேட்கிறார். கண்ணதாசன் கொடுக்கும் ஆலோசனை இவர்கள் வாழ்வில் மேலும் மேலும் பிரச்சினைகளைக் கொண்டுவர முடிவு என்ன என்பது மீதி கதை. பியார் பிரேமா காதல் ' ,'தனுசு ராசி நேயர்களே' என ஜாலி காதல் படங்கள் நடித்துக் கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு இந்தப் படம் மிகப் பெரிய மைல் கல்லாக அமையும்.நடிப்பிலும் முந்தைய படங்களை காட்டிலும் இதில் அதிக பக்குவ நிலை தெரிகிறது. தான் யார் என்பதை சொல்ல முடியாமல் தவிப்பதும்' காதல் மனைவி கண்டு உருகுவதும், அம்மா பாட்டியிடம் செல்லம் கொஞ்சுவதுமாக நடிப்பில் பண்பட்ட நிலை தெரிகிறது. தான்யா ஹோப் முதல்பாதியில் காதல் வெட்கம் ரொமான்ஸ் ஆனால் பிற்பாதியில் குழந்தை இல்லாமல் வாடுவது தன் கணவர் யார் என தெரிந்து உடைந்து நொறுங்குவதுமாக நடிப்பில் அத்தனை சிறப்பு அவரிடம். மேலும் மற்ற நாயகிகளிடம் இல்லாத அளவிற்கு தான்யாவிடம் ஒரு சிறப்பான உடல்மொழியும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. இந்தப் படத்திலும் அது சிறப்பாகவே கைகொடுத்திருக்கிறது.இந்த படத்தைப் பொருத்தவரை மிகப்பெரும் பலம் விவேக் தான். சர்ச்சைக்குரிய பாத்திரம் சற்றே தவறினாலும் ஆபாசத்தின் உச்சம் தொட்டு விடும் படியான கேரக்டர். ஆனால் அத்தனையையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விவேக். ரெட்டை அர்த்த வசனங்கள் பேசக்கூடிய தருணங்கள் இந்த படத்தில் நிறையவே இருந்தாலும் எடுத்துக் கொண்ட பாத்திரம் என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும் என்பதை புரிந்துகொண்டு காமெடி வசனங்களிலும் அற்புதமாகவே செயல்பட்டிருக்கிறார். 18+ கதைகள் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் .மேலும் கெட்ட வார்த்தை பேசினால் அல்லது அதீத கவர்ச்சி காட்டினால்தான் அது 18 பிளஸ் என்னும் தவறான சிந்தனை நிலவிக் கொண்டிருக்கும் தருணத்தில் தாராள பிரபு போன்ற சமூக சிந்தனையுள்ள படங்கள் நிச்சயம் இந்த நிலையை மாற்றும் என்றே நம்பலாம்.என்னதான் இந்தி படம் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு உரிய சில மாற்றங்களை செய்ததில் இயக்குனருக்கு பாராட்டுக்கள். பேசவே யோசிக்கும் சமூக பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன. அதை மையமாக கொண்டு அக்காலத்தில் பாலச்சந்தர் , பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் நிறைய படங்களை இயக்கினார்கள். ஆனால் இப்போதைய 18+ திரைப்படங்கள் பெரும்பாலும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதையும், கெட்ட வார்த்தை உபயோகிப்பதும், அதீத கவர்ச்சி உடைகளில் நடிகைகளை காட்டுவதையும் A படங்களாக பறைசாற்றிக் கொண்டிருக்கையில் தாராள பிரபு இவை அத்தனைக்கும் பதில் சொல்லும் விதமாக வெளியாகியிருக்கிறது.இது போன்ற படங்களை வேறு மொழிகளில் இருந்தாலும் தமிழுக்கு ரீமேக் செய்யும்போது மக்கள் மத்தியில் நிறைய விழிப்புணர்வு விஷயங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அனிருத் ரவிச்சந்திரன், ஷான் ரோல்டன், விவேக்-மர்வின், இன்னோ ஜினா, மேட்லி ப்ளூஸ், பரத் சங்கர், கபீர் வாசுகி, ஊர்க்கா என எட்டு பேர் இணைந்து இந்தப் படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்கள். ஆனால் பாடல்கள் பளிச்சென மனதில் நிற்கவில்லை இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் பின்னணி இசை அற்புதம். மொத்தத்தில் தாராள பிரபு சமூகத்தின் மாபெரும் பிரச்சனையான மகப்பேறு பிரச்சனையையும் அதன் பின்னணியில் இருக்கும் வியாபாரத்தையும்  அற்புதமாக எடுத்துவைத்து அதற்கான நல்ல தீர்வுகளையும் கொடுத்திருப்பதில் இந்த வருடத்தின் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2022 Yarlsri India news
Website by Yarlsri news