நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 7 ஆயிரம் பேர் மீது போலீசார் கடந்த 31 நாட்களில் வழக்குபதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. குமரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமீறலை கண்காணிக்க போலீசார் வாகன பரிசோதனை மேற்கொண்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25ம் தேதி முதல் தொடர்ச்சியாக அனைத்து நாட்களும் வாகன சோதனை நடத்தப்பட்டு விதிகளுக்கு புறம்பாக சாலையில் நடமாடுவோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வருகின்ற வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதில் மாவட்டத்தில் நேற்று மட்டும் 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 220 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 49 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 கார், லாரிகள், 133 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் இதுவரை மாவட்டம் முழுவதும் 5879 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 7048 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் 2185 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளனர்.
5 லாரிகள், 42 கார்கள், 55 ஆட்டோக்கள், 4552 பைக்குகள் என்று மொத்தம் 4654 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினருக்கு ‘சலாம்’!
குமரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செல்கின்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற போலீசார் ஆளும் கட்சியினர் கொடி கட்டி வரும் வாகனங்களை கண்டுகொள்வது இல்லை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களை எந்த பகுதியிலும் பெயரளவிற்கு கூட நிறுத்தி சோதனை செய்வது இல்லை. கிராமப்புறங்களில் அருகே உள்ள காய்கறி கடைகளுக்கு சென்றாலும் முக்கிய சந்திப்புகள் வரும்போது வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து செல்லுங்கள் என்று அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் நடக்க விடுகின்றனர். வாகனத்தில் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கூறுகின்றனர்.
மேலும் ஒரு சில காவல் நிலைய பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் சென்றாலும் கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்குபதிவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
வெளி மாநில வாகனங்களில் தீவிர கண்காணிப்பு அவசியம்
குமரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள், மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு வருகின்ற வாகனங்களில் பலரும் மறைந்து குமரி மாவட்டத்திற்கு வருகை தருவதாக கூறப்படுகிறது. ஒரு சில நிகழ்வுகளில் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டத்தையொட்டிய நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ளது. இதனை போன்று கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. எனவே இம்மாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்களில், கட்சி கொடி கட்டிய வாகனங்களில் யாரேனும் நுழைகின்றார்களாக என்பதை போலீசாரும், அதிகாரிகளும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.