தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அதிகமுள்ள அபாய பகுதிகளாக (ஹாட் ஸ்பாட்) அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 25 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. கிருமித்தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 1,267ஆக அதிகரித்தது.
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளையும் தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாகவும், அம்மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை, திருச்சி, விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இதுவரை கிருமித்தொற்று பாதிப்பு இல்லை. கொரோனா தொற்று உள்ளவர்கள் 15 பேருக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன.
இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருச்சியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 38 பேர் கொவிட் 19 நோயில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.