சுகாதாரப் பராமரிப்பு வளங்களால் சமாளிப்பதைச் சவாலாக்கும் அளவிற்கு கொவிட்-19 அதிகம் பேரை பாதித்து வருவதால் கிருமித்தொற்று நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வரும் நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் சு லியாங் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமி பரவும் வேகத்தை மெதுவடையச் செய்யவேண்டும் என்றும் இல்லையேல் நாம் என்ன செய்தாலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிய அதிக வாய்ப்புள்ளது என்றும் நோய்த்தொற்றியல் நிபுணருமான திரு சு லியாங் குறிப்பிட்டார்.
அந்தப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத்துறை உதவித் தலைவரும் இணைப் பேராசிரியருமான அலெக்ஸ் குக் கூறுகையில், “தற்போது தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் மத்தியில் பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்யும் வகையில் விரைவான, செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,” என வலியுறுத்தி இருக்கிறார்.