ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலால், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாருடன் இணைந்து, ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட, அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் முன்னாள் ராணுவ வீரர்கள், 5,000 பேர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர பகுதிகளில், 12 முன்னாள் ராணுவ வீரர்களும், மாவட்ட பகுதிகளில், 42 முன்னாள் ராணுவ வீரர்களும் நேற்று முதல் பணிபுரிய துவங்கிஉள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'முழு உடற்தகுதி உள்ள நபர்கள் மட்டுமே, பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். விரைவில் தகுதியுடைய மேலும் பலரை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்றனர்.